தாழ்வாரம் நவீன இலக்கியக் களம்
கும்பகோணம்

களம் - 12


தாழ்வாரம் ஓராண்டு நிறைவு நிகழ்வான பன்னிரண்டாவது நிகழ்வு  27/1/2019 அன்று நடைபெற்றது

சற்று தாமதமாக தொடங்கிய நிகழ்வு தொடக்கத்திலேயே களை கட்ட ஆரம்பித்தது.

கவிஞர் செருகுடி செந்தில் படைப்பாளர்களையும் விமர்சகர்களையும் வரவேற்றுப் பேசி களம் 12ஐ
முடுக்கிவிட்டார்.

அவர் மேலும் பேசுகையில், தொடங்கியதுமுதல் இந்த பன்னிரண்டு மாதங்களில் தாழ்வாரத்தின் பயண அனுபவங்களையும் அதில் வைக்கப்பட்ட நூல்கள் குறித்தும் அவற்றின் படைப்பாளர்கள் குறித்தும் தாழ்வாரத்தில் அறிமுகம்  வைக்கப்பட்ட நூல்கள் விருதுகள் வென்றிருப்பதையும் பெருமைபட கூறி படைப்பாளர்களை வரவேற்று அமர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து நிகழ்வை கோ. பாரதிமோகன் தொகுத்து வழங்க...
முதலாவது நூலாய் எழுத்தாளர்
பா. சரவணகுமரனின் 'கள்ளிவட்டம்' சிறுகதை எடுத்துக்கொள்ளப்பட்டது.

எம். எஸ். பாலு அவர்கள் நூல் குறித்து பேசினார்.
அவர் பேசுகையில் தனது பால்யத்தை நினைவு கூர்ந்து தனது வாழ்வானுபவத்தை கதைகளோடு முன்வைத்து பேசினார்.

இத்தகைய பண்பே சரவணகுமரனின் படைப்பு வெற்றிபெற்றதற்கான அடையாளமாய் தாழ்வாரக் கூடலாரால்  பாராட்டப் பட்டது.

தொடர்ந்து ஏற்புரைத்த நூலாசிரியர் சரவணகுமரன்,
தான் இந்தக் கதைகளை எழுதியதன் காரணிகளை
முன்வைத்து தாழ்வாரத்தில் தனது நூல் பேசப்படுவது குறித்து மகிழ்வையும் நன்றியையும் கூறி அமர்ந்தார்.

இரண்டாவதாக கவிஞர் ப. செல்வகுமாரின்
'ரூபாய்நோட்டில் மிதக்கும் சைபர்' கவிதை நூலைப் பேச வந்த கவிஞர் சுரேஷ் மான்யா, கவிதைகளின் ஆழ - அகலத்துள் பயணித்து அவற்றின் நுண் அரசியல் குறித்து தமது பார்வையை தாழ்வாரக் கூடலார் முன் தனக்கே உரிய மிக்க காத்திரமான பேச்சு நடையில் விரித்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து ஏற்புரைக்க எழுந்த
கவிஞர் ப. செல்வகுமார், கவிதைத் தொகுப்பின் தலைப்பான
'ரூபாய்நோட்டில் மிதக்கும் சைபர்' என தனது அரசியல் புரிதலுக்கொப்ப தான் மிகச் சரியாகவே நூலுக்கு வைத்திருப்பதாகக் கூறினார். மேலும் கவிதைகள் பேசும் நேர்முக அரசியலையும் அவர் எடுத்துரைத்தார்.

தனது காதல் கவிதைகளிலும் ஊடாடுகிற அரசியலையும் மிகுந்த உணர்ச்சி மிகுதலில் கோபம் கொப்பளிக்கும் உடல்மொழியோடும் திடீரென கனியும் அன்போடும்  ஓங்கிய குரல் வளத்தோடும் அவர் பேசிய அதிர்வில் தாழ்வாரம் குலுங்கியது.

நிகழ்வில் மூன்றாவது நூலான அண்டனூர் சுரா'வின்
'பிராண நிறக் கனவு' சிறுகதை தொகுப்பினை பேசவந்தார் கவிஞர் கு. இலக்கியன்.

தனக்கே உரிய மென்மொழி  நடையில் பேசிய அவர் நிறைய மேற்கோள்களுடன் கதைகளை அணுகினார்.

இதனைத் தொடர்ந்து ஏற்புரைத்த அண்டனூர் சுரா,
'தா தா தை தா...
என்னிடமிருந்து அபகரித்தவற்றைத் தா,
என் நிலத்தைத் தா,
என் நீரைத் தா
எனது ஊரைத் தா என அரங்கத்தை அதிரவைக்கும் மொழியோடு் தொடங்கி, தனது அரசியல் ஊடாடும் கதைகள் இவை எனக் கூறி தாழ்வாரத்திற்கு நன்றி நவில்ந்து அமர்ந்தார்.

நிறைவாக படைப்பாளர்களுக்கும் விமர்சகர்களுக்கும்
நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.


தன் பெயருக்கேற்ப  மிகுந்த ரசனையான பேச்சில் தாழ்வாரக் கூடலாருக்கு நன்றி மொழிந்தார் கவிஞர் தேவரசிகன்.

தாழ்வாரம் நவீன இலக்கியக் களத்தின் முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

தாழ்வாரக் கூடலாருக்கு ❤️ நன்றி!

Comments

Popular posts from this blog

தாழ்வாரம்